Thursday, November 24, 2011

சாதியத்திற்கு எதிரான போர் முழக்கம்

மனிதனை மனிதனாய் பார்க்க தெரியாதவனும், மனிதனை சாதியின் பெயரால் பகுத்து பார்க்க நினைப்பவனும் பகுத்தறிவு அற்றவனே...

இயற்கை மனிதனை உருவாக்கும் போது சாதி உருவாகவில்லையே !

ஏன் மனிதனே உருவாக்கினான் இந்த பாகுபாட்டை...

மனித கண்டுபிடிப்புகளில் மிகமிக கேவலமான கண்டுபிடிப்பு என்றால் அது சாதி தான்...!


அந்த கேவலத்தை வாய் கூசாமல் சொல்லி மார்தட்டி கொள்ளும் அறிவிலிகளை என்னென்று சொல்வது..?


இதில் பெருமை வேறு...என் சாதி காரன் என்று சொல்லி கொள்வதிலும், பெயருக்கு பின்னே சாதி பெயரை சேர்த்து கொள்வதிலும் பெருமை பட்டு கொள்கிறார்கள் ...


இதில் மிக கொடுமை என்னவென்றால், படித்தவர்கள் கூட சாதியத்திற்கு துணை போவது தான்...


அவர்கள், பேசாமல் வாங்கிய பட்டத்தை தீயில் கருக விட்டு ஐந்தறிவு உயிரினம் போல் சுற்றலாம்...ஐயகோ! ஐந்தறிவு உயிரினம் கூட சாதி பார்பதில்லயே ...அப்படியென்றால் அவர்கள் அதற்கும் கீழா?

கற்றிருந்தும் மடையர்களாய் வாழ்வது முறையா?

நட்பில் சாதியம்  பார்க்காதவர்கள் கூட மண வாழ்க்கையில் சாதியம் பார்க்கிறார்களே..இதை என்னவென்று சொல்வது ...

இன்னும் மனித இரத்தத்தில்  சாதியம் ஏதோ ஒரு இடத்தில் ஓடி கொண்டிருக்கிறது என்று தான் கொள்ள வேண்டும் போலிருக்கிறது !

சமூகம் பார்க்க ஒரு வேடமும், சுய வாழ்க்கைக்கு மற்றொரு வேடமுமா?

என்ன ஒரு அவமானம்....!

எத்தனை எத்தனை கல்வி அறிவிருந்தும், இப்படி செய்பவர்களை பார்த்தால் என்ன சொல்வது என்று தெரியவில்லை...!

இயற்க்கையில் எந்த உயிரினமும் பார்க்காத சாதியை மனிதன் மட்டும் ஏன் பார்க்கிறான் ?

இயற்கை சாதியை பார்த்தா மழை பொழிகிறது?

இயற்கை காட்டாத பாகுபாட்டை மனிதன் மட்டும் காட்டுவது ஏன் ?

நாம் செய்வது இயற்கைக்கு எதிரானது அன்றோ ...!

நம் அனைவருக்கும் தாயான இயற்கையை நாம் எதிர்க்கின்றோமே, இது நியாயமா?

படித்தவர்களே, ஞானிகளே, அறிவு ஜீவிகளே.... கொஞ்சம் சிந்தியுங்கள்...

நம் மண்ணில் இன்னும் சாதியின் பெயரால் குருதி படியலாமா! ஒற்றுமையாய் வாழலாமே...!

கடந்த காலங்களில் சாதியின் பெயரால் நடந்த கொடுமைகளை மறப்போம்... 

நம் சந்ததியினராவது சாதியில்லா காற்றை சுவாசிக்கட்டும்..!

சாதியம்  என்னும் களை வேரோடு கிள்ளி எறியப்பட்டால்தான் இந்த சமுதாயம் உய்வு பெறும்....!